அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Thursday, 22 September 2016

இந்த குயில் இனி பாடாது! திரையுலகில் அதிர்ச்சி...?

பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளவர் ஜானகி.
பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது.
அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.
1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார்.
மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பாட மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளவர் ஜானகி. அது ஏன் கடைசியாக மலையாள பாடல் என்று கேட்டதற்கு, நானாக தேர்வு செய்யவில்லை. அதுவாக நடந்துள்ளது. இசை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு நெருக்கமான தாலாட்டு பாடலே என்னை தேடி வந்துள்ளது என்கிறார் ஜானகி.
ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழ் பாடல் ஆகும். ஜானகி எஸ்.பி.பி. ஜோடிக் குரல் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இந்நிலையில் ஜானகியின் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.